சென்னை: தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி வேளாண்மைத் துறை சார்பில் 93 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
93 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்கள் திறப்பு! - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
வேளாண்மைத் துறை சார்பில் 93 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.
தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 45 கோடியே 39 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டம் - அவலூர்பேட்டை, திருக்கோவிலூர் மற்றும் செஞ்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் , குறிஞ்சிப்பாடி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கட்டப்பட்டுள்ள 7500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு , இயந்திரங்களுடன் கூடிய தரம்பிரிப்பு மற்றும் மதிப்பீட்டு கூடம், ஏலக்கூடம், விவசாயிகள் ஓய்வு அறை, வியாபாரிகள் ஓய்வு அறை, பரிவர்த்தனைக் கூடம் மற்றும் எடைமேடை ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை, கிள்ளிக்குளம், ஈச்சங்கோட்டை மற்றும் குடிமியான்மலை ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் 30 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கங்கள், அலுவலகக் கட்டடங்கள் , ஆய்வகங்கள் , நூலகங்கள் , பயிற்சியாளர்கள் விடுதியுடன் கூடிய பயிற்சியாளர் அரங்கங்கள், மலைக்காய்கறி பயிர்களான காரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ், அவரை வகைகள் போன்ற பயிர்களின் சாகுபடியினை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம் , நஞ்சநாட்டில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மலைக்காய்கறி பயிர்களுக்கான மகத்துவ மையம் எனப் பல வேளாண் திட்டங்களைத் திறந்து வைத்தார்.