சென்னை: கெல்லீஸில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை கெல்லீஸில் இயங்கி வரும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இளைஞர் நீதி குழும ஆணையின் பேரில் தங்க வைக்கப்படும் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் சிறார்களுக்கு, தேவையான உணவு, உடை உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதுடன், உளவியலாளர் மூலம் ஆற்றுப்படுத்துதல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றது. மேலும், இச்சிறார்களுக்கு முறைசாரா கல்வியும், தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் 2017-18ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, சென்னை, கெல்லீஸில், சிறுமியருக்கான கூர்நோக்கு இல்லத்திற்கு தங்கும் அறைகள், சமையலறையுடன் கூடிய உணவருந்தும் கூடம், தொழிற்பயிற்சி கூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை, கெல்லீஸில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்த பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, அவ்விடத்தில் சுமார் 1554 சதுர மீட்டர் பரப்பளவில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுமியர்களுக்கான அரசினர் கூர்நோக்கு இல்லக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கூர்நோக்கு இல்லம், சிறுமிகளை வயது வாரியாக பிரித்து, சிறு அலகாக ஒவ்வொரு அறையிலும் 5 சிறுமிகள் வீதம் தங்க வைக்கும் வகையில் குளியலறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் கூடிய 12 தங்கும் அறைகள், சமையல் அறையுடன் கூடிய உணவருந்தும் கூடம், தொழிற்பயிற்சி / பல்நோக்கு கூடம், பணியாளர் அறை, அலுவலக அறை, மருத்துவர் அறை, குடிநீர் சுத்திகரிப்பான் (RO Plant), கண்காணிப்பு படக்கருவிகள் (CCTV), கழிவு நீர் சுத்திகரிக்கும் அமைப்பு உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலமாக முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டி. ஜெயக்குமார், வி.சரோஜா, தலைமைச் செயலர் சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலர் மதுமதி, சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா, சமூகநல ஆணையர் ஆபிரகாம் ஆகியோருடன் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.