தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நூறாண்டு கனவு: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் எடப்பாடி! - முதலமைச்சர் பிப் 21

காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்ட முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் நாளை (பிப்ரவரி 21) அடிக்கல் நாட்டுகிறார்.

cm function on feb 21
cm function on feb 21

By

Published : Feb 20, 2021, 9:07 AM IST

Updated : Feb 22, 2021, 10:13 AM IST

சென்னை: காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்ட முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி குறித்து பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பிப்ரவரி 19ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளார்.

பிப்ரவரி 21இல் அடிக்கல் நாட்டல்

அதில் "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 21ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெறும் விழாவில் ஆறாயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், மூன்றாயிரத்து 384 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல், நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.

இவ்விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

நூறாண்டு கால கனவு

வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.

திட்டத்தின் வரைபடம்

இனி தென் தமிழ்நாடு செழிப்புதான்

ஆறாயிரத்து 941 கோடி ரூபாய் மதிப்பிலான முதல் கட்டத்திற்கு தற்பொழுது அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலமும் பயன்பெறும் வகையில் 118.45 கி.மீ. நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 220 ஏரிகளும், 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலமும் பயன்பெறும் வகையில் தெற்கு வெள்ளாற்றிலிருந்து 109 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் உருவாக்கி வைகையுடன் இணைக்கப்படுகிறது.

மூன்றாவது கட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 492 ஏரிகள், 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலமும் பயன்பெறும் வகையில் 34 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.

14 ஆயிரத்து 400 கோடி ரூபாயில் 262 கி.மீ. தூரத்திற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

திட்டத்தின் வரைபடம்

அதிகரிக்கப்படும் பாசனத்திறன்

காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல், நவீனப்படுத்தல் திட்டத்தின்கீழ் புனரமைக்கும் பணிகள் மூன்றாயிரத்து 384 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ. நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான நான்கு லட்சத்து 67 ஆயிரத்து 345 ஏக்கர் நிலம் பாசனம் உறுதிசெய்யப்படும்.

மேலும், காவிரி டெல்டாவிலுள்ள பழமைமிக்க பாசன கட்டுமானங்கள் ஸ்காடா தொழில்நுட்பம் (SCADA) மூலம் 72 கோடி ரூபாய் மதிப்பில் தானியங்கி அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் காவிரி உப வடிநில கால்வாய்களின் பாசனத்திறன் 20 விழுக்காடு அதிகரிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Last Updated : Feb 22, 2021, 10:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details