3.1 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பழைய நிலக்கரி அனல் மின் நிலையங்களை மூடுவது மற்றும் 3.5 ஜிகாவாட் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலைய திட்டங்களுக்கான நிதியை நிறுத்திவிட்டு, எதிர்காலத் தேவைக்காக குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசும், மின் பகிர்மான கழகமும் 35 ஆயிரம் கோடி ரூபாயை 5 ஆண்டுகளில் சேமிக்க முடியும் என கிளைமேட் ரிஸ்க் ஹாரிசான்ஸ் (Climate Risk Horizons) என்ற ஆராய்ச்சிக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படியான உலைகள் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை மற்றும் நெய்வேலி I மற்றும் II நிலை அனல் மின் நிலையங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது.
உதய் திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைந்ததன் மூலம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் தோல்வி அடைந்துள்ளதாக ’Recipe for Recovery’ என்ற அறிக்கையும் குறிப்பிடுகிறது. அண்மையில் மின்வாரியத்துக்கு 30,230 கோடி கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், மின்கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் மின்வாரிய கடன் தவணைகள் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வறிக்கையின் எழுத்தாளர் ஆஷிஷ் பெர்னாண்டஸ் கூறும்போது”இந்த பழைய அனல் மின் நிலையங்களில் காற்று மாசுபாடு தடுப்பு விதிகளை பின்பற்றுவதற்கான தொழில்நுட்பத்தை நிறுவ 1,600 கோடி ரூபாயை செலவிடுவதற்கு பதில், அவற்றை மூடுவதே லாபகரமானதாக இருக்கும். மேலும், நாட்டில் தற்போது நிலவும் மின் மிகை உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றால் மாநில அரசுக்கு இந்த பழைய அனல் மின் நிலையங்களை மூடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், “ இந்த அனல்மின் நிலையங்கள்தான் கடந்த பத்தாண்டுகளில், காற்று மாசுபாடு மற்றும் சாம்பல் கழிவு பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. இந்த உலைகளை மூடுவதே சுற்றுச்சூழல் ரீதியாக சரியானதாக இருக்கும். அனல் மின் உற்பத்தியின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முதலீடு செய்து எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்” எனக் கூறினார்.