சென்னை:திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 6ஆவது தெருவில் வசிப்பவர், கணேஷ் ரமணன். இவர் பெருங்குடியில் கொரியர் சேவையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மாதம் ஜிஆர்டி கடையில் வாங்கிய 100 கிராம் மதிப்புள்ள தங்கக் காசு மற்றும் அவரது மனைவி ஷோபா அணிந்திருந்த தங்க வளையல்கள் உள்ளிட்ட நகைகள் என மொத்தம் 12 சவரன் நகைகளை பிளாஸ்டிக் உறையில் போட்டு, கணவர் கணேஷ் ரமணனின் கட்டில் அடியில் வைத்துள்ளார்.
அதனை மனைவி ஷோபா வீட்டைச் சுத்தம் செய்யும் பொழுது, நகை இருப்பது தெரியாமல் தங்க நகைகள் வைத்து இருந்த கவர் மற்றும் பழைய துணிகள், பழைய பொருள்களை வீட்டில் வெளியே உள்ள குப்பைத்தொட்டியில் போடுவதற்காகக் கொண்டு சென்றுள்ளார்.
குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் தங்கம்
அப்பொழுது, துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு துப்புரவு பணிப் பெண்கள், அவரிடம் நகை இருந்த குப்பை உறையை வாங்கிக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் கொட்டி பிரித்தபோது, தங்க நகைகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து தனது சூப்பர்வைசர் செந்தமிழன் இடம் தங்க நகையை ஒப்படைத்துள்ளனர். உடனடியாக சூப்பர்வைசர் சாத்தாங்காடு காவல் நிலையத்திற்குத் தங்க நகையைக் கொண்டு சென்று, குப்பையைத் தரம் பிரிக்கும் போது குப்பையில் தங்க நகை வந்ததாகவும், இந்த தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறி நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து காவல்துறையினர் நகையை வாங்கி விசாரணை மேற்கொண்டதில், நகையைத் தொலைத்த கணேஷ் ரமணன் சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், சாத்தாங்காடு காவல்துறையினர் நகையைப் பறிகொடுத்த கணேஷ் ரமணன், ஷோபா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து நகைகளைச் சரிபார்த்து ஒப்படைத்தனர்.
காவல்துறை மூலம் ஒப்படைப்பு
செய்யும் தொழிலைச் சுத்தமாக மட்டும் செய்யாமல் நேர்மையாகவும் பணியாற்றிய துப்புரவு பணிப் பெண்கள் மற்றும் சூப்பர்வைசர் செந்தமிழன் செய்த செயல் பலரிடமும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
இதையும் படிங்க:வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன?