தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்தது குறித்து, உள்துறை அமைச்சகம் அரசுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் கரோனா அச்சுறுத்தல் நீங்காததால் திரையரங்கங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 100% இருந்து 50% ஆக குறைக்க அறிவுறுத்தியது. மேலும், அரசின் இந்நடவடிக்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி விதிமீறல் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு முதல் நாளான ஜனவரி 13 அன்று, நடிகர் விஜயின் ’மாஸ்டர்’ மற்றும் நடிகர் சிலம்பரசனின் ’ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இதனால் அவர்களின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்கு உரிமையாளர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இது குறித்து பேசிய திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், ”உள்துறை அமைச்சக கடிதம் ஏமாற்றம் அளித்தாலும், தமிழக அரசு முடிவு எடுக்கும் வரை காத்திருப்போம். எனவே அரசு உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டும். அதற்கு பின் தியேட்டர் உரிமையாளர்கள் கூடி ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் 5% முன்பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளது” என்றார்.