தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிகில் வசூல் விவகாரம்: பைனான்சியர் அன்புச்செழியன் வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜர்! - பைனான்சியர் அன்புச்செழியன்

சென்னை: ’பிகில்’ திரைப்பட வசூலில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறி வருமானவரித் துறை நடத்திய சோதனையில் 77 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதையடுத்து பைனான்சியர் அன்புச்செழியன் வருமானவரித் துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

office
office

By

Published : Feb 18, 2020, 1:44 PM IST

’பிகில்’ திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறி வருமானவரித் துறையினர் தமிழ்நாடு முழுவதும் இருவருக்கும் சொந்தமான 38 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் விஜயையும் அவரது வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 4 நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில் பைனான்சியர் அன்புச்செழியன், அவரது நண்பருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை வருமானவரித் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், நடிகர் விஜய் ’பிகில்’ படத்திற்கு வாங்கிய சம்பளம் மூலம் வாங்கியுள்ள அசையா சொத்துகள் தொடர்பான ஆவணங்களையும், அடையாறு சாஸ்த்ரி நகரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் ’பிகில்’ திரைப்படம் தொடர்பான பல முக்கிய ஆவணங்களையும் வருமானவரித் துறை அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் ’பிகில்’ திரைப்பட வசூலில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறப்படும் 165 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த, பைனான்சியர் அன்புச்செழியன் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய், கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகிய மூவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்கக்கோரி அத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் ஆஜராகி விளக்கமளித்தனர். மேலும், கடந்த 12ஆம் தேதி தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் மகளும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியுமான அர்ச்சனா கல்பாத்தி ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதால், இன்று வருமான வரி அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜரானார்.

இதையும் படிங்க: கமுதியிலிருந்து கோடம்பாக்கம் வரை - அன்புச்செழியன் நடத்தும் 'தர்பார்'

ABOUT THE AUTHOR

...view details