மத்திய அரசைக் கண்டித்து 2017ஆம் ஆண்டு, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்திற்கு பூட்டு போட்ட வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ. கவுதமன் ஆஜரானார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கவுதமன்,
"சமீபகாலமாக அமைச்சர் கே. பாண்டியராஜன் தமிழ்மொழியை, தமிழ் வரலாற்றை கேள்விக்குள்ளாக்குகிற நிலையை ஏற்படுத்திவருகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைக்குத்தான் அவர் அமைச்சராக உள்ளார். ஆனால், சமஸ்கிருதத்திற்கு வக்காலத்து வாங்குவது, கீழடி ஆய்வை பாரதப் பண்பாடு, பாரத கலாசாரம் என்று சொல்வதெல்லாம் முறையல்ல, சரியல்ல.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை, தமிழ் வளர்ச்சிக்காகத்தான் அப்போது முதலமைச்சராக இருந்த அண்ணா கொண்டுவந்தார். இதில் இந்தியை திணிப்பது, அதை எதிர்த்தால் தெலுங்கு, பிரெஞ்சு மொழியை கற்றுத் தருவதெல்லாம் அண்ணாவிற்கும் தமிழ்நாடு மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு இது புரட்சியாக மாறிவிடாமல் தடுக்க வேண்டும்.