சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 16) மு.க. ஸ்டாலினை தென்னிந்திய திருச்சபை பேராயர்கள் நேரில் சந்தித்து நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதில், தென்னிந்திய திருச்சபை செயலாளர் சி. பெர்னான்டஸ் ரெத்தினராஜா, மதுரை பேராயர் ஜோசப், கோயம்புத்தூர் பேராயர் தீமோத்தேயு உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர், தென்னிந்திய திருச்சபை பொதுச்செயலாளர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,
கிறிஸ்தவர்களுக்கு என்றும் அரணாக இருப்பது திமுக
"தென்னிந்திய திருச்சபை சார்பில் இன்று ஸ்டாலினை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேராயர்கள் சார்பாக நாங்கள் சந்தித்தோம். பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும், இன்றைக்குச் சுபிட்சமாக, மகிழ்வோடு தமிழ்நாட்டில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை இந்த நாடே அறியும்.
அந்த வகையிலே கிறிஸ்துவ மக்களுக்கு என்றைக்கும் அரணாக இருக்கின்ற அமைப்பு திராவிட முன்னேற்றக் கழகம். எனவே, எங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும், எதிர்வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம், அதனுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு எங்களுடைய ஆதரவினைத் தெரிவித்தோம்.
- மேலும், ஸ்டாலினிடம் - உங்களுடைய வெற்றிக்காக உழைப்போம், உழைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை நாங்கள் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம்.
நிச்சயமாக நடைபெறவிருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலே சமூகநீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற இந்தத் தமிழ்நாடு, திமுக தலைமையிலே போட்டியிடக் கூடிய அனைத்து வேட்பாளர்களும் நிறைவான வெற்றியைப் பெறுவார்கள் என்ற எங்களுடைய எண்ணத்தையும், ஆதரவையும் தெரிவித்திருக்கிறோம்.