பத்து மாத கரோனா நெருக்கடிகளில் சிக்கியிருந்த மக்களுக்கு விழாக்கள்தான் இளைப்பாறுதலைத் தருகின்றன. அப்படியான விழா ததும்பும் மாதங்கள்தான் டிசம்பரும், ஜனவரியும். ஏசு பிறப்பு, ஆண்டு தொடக்கம், பொங்கல் எனத் தமிழர்களின் இல்லங்களில் விழா களை கட்டும். தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருப்பதால், இந்தாண்டு கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, மற்ற மதத்தவராலும் கொண்டாடப்படும் பெருவிழாவாகவே தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
அத்தகைய கிறிஸ்தவத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பின்பு என்பதே, நம் பலரின் எண்ணமாக உள்ளது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன், இயேசுவை சிலுவையில் அறைந்த பின், அவரது 12 சீடர்களும் நற்சிந்தனைகளை பரப்ப உலகின் திசைகள் நோக்கிப் பயணித்தனர். அதில் ஒருவர் தான் புனித தோமையார். கடல் வழியாக கி.பி., 52இல் இன்றைய கேரளத்திற்கு வந்து, பிறகு கடல் வழியாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். கி.பி.72ல் தற்போதுள்ள புனித தோமையார் மலையில் அவர் கொல்லப்பட, சாந்தோம் பேராலயத்தில் அவரது கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.
'இங்கு வாழ்ந்த மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு ஏற்றத்தாழ்வுடன் நடத்தப்படுவதைக் கண்ட தோமையார் உள்ளிட்ட பரப்புரையாளர்கள், அவர்களுக்கு உதவினர். கல்வி போதித்தனர். சம நீதியைப் பெற்றுத் தந்தனர். இதனால், அவர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்த இங்குள்ள மக்கள் பலரும் கிறிஸ்தவத்தைத் தழுவினர். தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் பரவுவதற்கு, மறுக்கப்பட்ட உரிமைகள் மீளப்பெற்றதே காரணம்" என்கிறார், தமிழ்த்துறை பேராசிரியர் அமிர்த லெனின்.
மேலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், கூர்மைக்கும் கிறிஸ்தவத்தின் பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார், சமூக கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஜான் குமார். 'தமிழ்நாட்டில் 15, 16ஆம் நூற்றாண்டுகளில் இயேசு சபையினரால், 12 கல்லூரிகள், 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் உருவாக்கப்பட்டன. அதன்வழியாக கல்வி மற்றும் மருத்துவத்தை கிறிஸ்தவமே இங்கு பரவலாக்கியது. கிறிஸ்தவத்தையும் தமிழையும் இணைத்த பல அறிஞர்கள் இருக்கின்றனர். கிருஷ்ணபிள்ளையின் ரக்ஷன யாத்திரிகம், வீரமாமுனிவரின் தேம்பாவணி போன்ற காப்பியங்களே இதற்கு எடுத்துக்காட்டு" என கிறிஸ்தவத்திற்கும் தமிழுக்குமான தொடர்பைப் பட்டியலிடுகிறார், ஜான் குமார்.