தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விவிபேட் (VVPAT) கருவிகள் ஆகியவற்றை கணினி மூலம் முதல்நிலை தெரிவு செய்தல், இன்று ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 5,911 வாக்குச்சாவடிகளில், 2,157 துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும். வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தவுள்ள 7,098 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,098 கட்டுப்பாட்டு கருவிகள், 7,454 விவிபேட் இயந்திரங்களில், முதற்கட்டமாக எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு எந்தெந்த இயந்திரங்கள் என கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டது. மேற்படி தெரிவு செய்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரங்கள் மின்னஞ்சல் வழியாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டது.