சென்னை:சின்னசேலம் பள்ளி மாணவியின் மர்ம மரணம் வழக்கை சென்னை உயர் நீதிமன்றமானது தானாக முன்வந்து விசாரிக்க அனைத்து இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் நிறுவனர் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், சின்னசேலம் சக்தி இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி ஜூலை 12 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தங்கள் கவனத்தை ஈர்த்திருக்கும் என்று நம்புகிறோம். இவ்விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை ஏற்கத்தக்க வகையில் இல்லை எனக் கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள், நேற்றும் (ஜூலை 16) நான்காவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவி ஸ்ரீமதியும், இதற்கு முன்னர் வேறு ஆறு குழைந்தைகளும் மர்மமான முறையில் இறந்துள்ளதாக கூறப்படும், இந்த தனியார் பள்ளி நிர்வாகிகளை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததாக தெரியவில்லை. இதன் காரணமாகவே கடந்த ஐந்து நாட்களாக பெற்றோர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 17) அந்த போராட்டம் கலவரம், தீவைப்பு, துப்பாக்கி சூடு என்று மாநிலத்தின் தலைப்பு செய்தியாகியுள்ளது.