ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், மொரிசியஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தென்னாப்பிரிக்காவின் குவாசுலு நட்டால் மாகாண நிதித்துறை அமைச்சர் ரவி பிள்ளை, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், பொருளாதார உறவுகளுக்கான வெளியுறவுத் துறை செயலாளர் டி.எஸ். திருமூர்த்தி, இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ், தமிழக தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பரசிவம் பிள்ளை வையாபுரி, "பொருளாதார வளர்ச்சி மூலம் தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம். தமிழ் மக்களுக்கு நல்ல வீடு, தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க நிதி ஆதாரங்கள் அவசியம். இந்த மாநாட்டின் மூலம் தமிழ் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்துறையினர் தங்களுக்குள் ஒரு தொடர்பு ஏற்படுத்தி தமிழர்கள் வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை உருவாக்க முடியும். இதன் மூலம் வர்த்தகக் கூட்டமைப்பு, முதலீடுகள் அதிகரிக்கும்" என்றார்.