சென்னை: கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், ராஜகோபாலன் மீது முன்னதாகவே மாணவிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் இரண்டு நாட்கள் தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் மேலும் இரண்டு மாணவிகள் ராஜகோபால் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, மாவட்டக் குழந்தைகள் நலக் குழு அலுவலர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகள் பட்டியல் தயாரித்து, அவர்களிடம் ராஜகோபால் கொடுத்த பாலியல் தொந்தரவு தொடர்பான ரகசிய வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் புகார் அளித்தும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற அடிப்படையில் பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என மாவட்ட குழந்தைகள் நலக் குழு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஏற்கனவே வருகிற மே 31ஆம் தேதி பள்ளி முதல்வர், தாளாளர் இருவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காவல் துறையினரின் விசாரணை என்பது ஆசிரியர் ராஜகோபால் குற்றம் தொடர்பாக மட்டுமே இருக்கும் எனவும், தங்களுடைய விசாரணை பாதிக்கப்பட்ட மாணவிகளை மையமாக வைத்தும், மாணவிகள் அந்தப் பிரச்சினையில் இருந்து மனரீதியாக மீண்டு வரும் வகையில் இருக்கும் எனவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், தங்களுடைய விசாரணையில் பள்ளியின் மீதும், ஆசிரியர் ராஜகோபால் மீதும் புதிய குற்றச்சாட்டுக்கள் உறுதியானால், அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து காவல் துறையினரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளியின் முதல்வர், தாளாளருக்கு சம்மன்