சென்னை:செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 20 வயது இளம் பெண், செம்பியம் காவல் உதவி ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரில் 12வயது முதல் தந்தை தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து தாய் மற்றும் தந்தையின் சகோதரரிடம் கூறியபோது, குடும்ப மானத்திற்கு அஞ்சி தனக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லவிடாமல் தடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தந்தை மீதும் உடந்தையாக இருந்த தாய் மற்றும் உறவினர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளார். இப்புகார் தொடர்பான விசாரணை செம்பியம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மாற்றப்பட்டு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெண்ணின் குற்றச்சாட்டுகள் உறுதியானது.
அதனடிப்படையில் பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினர் என 3 பேர் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செம்பியம் அனைத்து மகளிர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சமூக நல்லிணக்க பெரியாரே... பிரதமர் மோடியை வாழ்த்தி பாஜகவினர் போஸ்டர்