கரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்த்திட முடிவெடுத்துள்ளன. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி, அம்முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர் தலைமையில், உயர் அலுவலர்கள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்பினர்கள் அடங்கிய, சிறப்பு பணிக் குழு (Special Investment Promotion Task Force) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பணிக்குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது மற்றும் அந்த நிறுவனத்திற்கு அரசின் உதவி போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வியூகம் அமைப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.