சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள, குடிமைப் பணிகளுக்கு பயிற்சி வழங்கும் மையமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில், "முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை" தொடங்கி வைத்து, இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு, "தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நன்றாக செயல்படுகின்றனவா, அவற்றில் மாற்றம் தேவையா, திட்டங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை சிந்தித்து ஆய்வு செய்து மேற்பார்வை செய்ய, புதிய பார்வை கொண்ட இளைஞர்கள் மூலம் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கான ஆலோசனை வழங்கி, 12 துறைகளின் மூலமாக இளைஞர்களுக்கான புத்தாய்வுத் திட்டத்தை கண்காணிக்க முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இதற்காக, தமிழகத்தில் 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்து, முதற்கட்ட தேர்வில் 14 ஆயிரம் பேர் வடிகட்டப்பட்டனர். அப்படி படிப்படியாக வடிகட்டப்பட்டு கடைசியாக 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நீங்கள் வடிகட்டிய புத்திசாலிகள்" என தெரிவித்தார்.