சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், அரசு உயரலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இக்குழு முதலமைச்சரின் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.
ஆலோசனைக் கூட்டம்
இக்குழுவில் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக்குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் இராம. சீனுவாசன் முழு நேர உறுப்பினராகவும் உள்ளார். மேலும், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து இ.ஆ.ப, (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் முனைவர் ஜெயரஞ்சன் தலைமையில் எழிலகத்தில் நடைபெற்றது.