சென்னை:அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில், 8 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆறு குளிர் சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள் மற்றும் 15 குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகள் அடங்கிய இரண்டு புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை(ஏப்ரல்.04) 10 மணியளவில் திறந்து வைக்கிறார்.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி 1981-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பயிற்சிக்கான முக்கிய மையமாக விளங்குகிறது. இந்நிறுவனம் அமைச்சுப்பணி முதல் அகில இந்தியப் பணி அலுவலர்கள் வரை அனைத்துத் தரப்பு அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி தரும் முதன்மை நிறுவனமாக விளங்குவதால், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையாலும், தமிழ்நாடு அரசாலும் மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.