சென்னை தியாகராயநகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது கூறியதாவது, 'மே 21, 1991 தமிழ்நாட்டு மக்களுக்கு துயரமான நாள். அன்று முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டு விபத்தில் தமிழ்நாடு மண்ணில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து 20 நாட்கள் கழித்து ஜூன் 11, 1991 அன்று சிபிஐ அலுவலர்களால் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அதன் பின் 26 பேருக்கு சென்னை பூந்தமல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை கொடுத்தது.
அதன் பிறகு ஒரு சிலர் விடுதலை செய்யப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், தற்போது பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் மிக வித்தியாசமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதாக ’ அண்ணாமலை குறிப்பிட்டுப்பேசினார்.
மேலும் அவர், ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்கிறது. ஆனால், சரித்திரத்தை எப்போதும் நாம் மறக்கக் கூடாது. நம் மண்ணில் நடந்ததையும், ராஜிவ் வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்பதையும் எப்போதும் நாம் மறக்கக் கூடாது. தமிழ்நாடு காங்கிரஸ் இந்த விசயத்தில் இரட்டை வேடம் போடுகிறது. திமுகவிற்கு கொடுத்த ஆதரவை காங்கிரஸ் திரும்ப பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த தீர்ப்பு காங்கிரசிற்கான சித்தாந்த சவால்.
நேற்றிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடந்து கொள்ளும் விதம் நிரபராதியை விடுதலை செய்ததை கொண்டாடுவது போல உள்ளது. உண்மையிலேயே அரசியலமைப்பில் எடுத்த சத்தியப் பிரமாணப்படி முதலமைச்சர் செயல்படுகிறாரா என சந்தேகமாக எழுகிறது. தீர்ப்பின் எந்த இடத்திலும் அவர்களை நிரபராதி என உச்ச நீதிமன்றம் கூறவில்லை என்றாலும் ஏற்க வேண்டிய தீர்ப்புதான்.
பேரறிவாளனின் விடுதலையைக் கொண்டாட வேண்டாம்:ஆனால், முதலமைச்சர் விமான நிலையத்தில் பேரறிவாளனை ஆரத்தழுவி ஏதோ சாதனை செய்தது போல் காட்டிக் கொள்கிறார். இந்த 7 பேரும் குற்றவாளிகள் மட்டுமே. அவர்கள் கொண்டாடப்பட வேண்டியர்வர்கள் இல்லை. தமிழ்நாட்டில் கொண்டாட ஆயிரம் பேர் உள்ளனர். இவரின் விடுதலையைக் கொண்டாட வேண்டாம். பேரறிவாளன் அவர் வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்றார்.