சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 3) தலைமைச்செயலகத்தில், உள் (போக்குவரத்துத்) துறை சார்பில் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அலுவலகக்கட்டடம் மற்றும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு
3 கோடியே 72 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டடம் ஆகியவற்றைத்திறந்து வைத்தார்.
போக்குவரத்துத்துறை அலுவலகப்பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகனத்தணிக்கை போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத்துறை தொடர்பான சேவைகளைப்பெறவும், புதிய பகுதி அலுவலகங்களை தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப்போக்குவரத்து அலுவலகமாகத்தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத்தள வசதிகளுடன் புதிய வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்றப் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டாரப்போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.