மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(21-9-2022) கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தலைமைச்செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகவும், அவர்கள் ஆரம்பத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்குச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது.
ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் தாய்லாந்திலிருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருவதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.