சென்னை:நெகிழிப் பொருள்களுக்கு எதிரான மஞ்சப்பை இயக்கம், அதற்கு மாற்றான பொருள்கள் குறித்த கண்காட்சியை சென்னை கலைவாணர் அரங்கத்தில் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடர்ந்து மஞ்சப்பை தொடர்பான குறும்படத்தையும் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல், விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சுற்றுச்சூழல் - விளையாட்டுத் துறை முதன்மைச் செயலர் சுப்ரியசாஹு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் உதயன், ஜெர்மன், பிரிட்டிஸ் தூதரக அலுவலர்கள் காரின் கிரிஸ்டினா, மரியா ஸ்டோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மஞ்சப்பை விழிப்புணர்வு
அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், “முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்து எதிர்காலச் சுற்றுச்சூழலைக் காத்துவருகிறார். இயற்கையை மீட்டெடுக்கும் செயலைச் செய்துவருகிறார். நெகிழியால் ஏற்படும் பதிப்புகள் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே நெகிழியைத் தவிர்க்க வேண்டிய முக்கிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
உலகை விட்டு நெகிழியை அப்புறப்படுத்துவதற்கான தாரக மந்திரத்தின் தொடக்கமே இந்த மீண்டும் மஞ்சப்பை இயக்கம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஒரு ஆற்றை முழுமையாகச் சுத்தப்படுத்தி அதனை நெகிழி இல்லாத இடமாக மாற்றுவதே நமது முதலமைச்சரின் தலையாய கடமையாக உள்ளது" என்றார்.