சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர். எழிலனை எதிர்த்து பாஜகவில் குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் குஷ்புவை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி இன்றி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ”பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் தான் குஷ்பு. அவர் சிறந்த பேச்சாளர் மற்றும் திறமைசாலி. ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் தேவைகளை புரிந்து அதனை நிவர்த்தி செய்யும் திறன் குஷ்புவிடம் உண்டு” என்றார்.
குஷ்பு சிறந்த பேச்சாளர், திறமைசாலி என முதலமைச்சர் புகழாரம்! - எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரித்தார். அப்போது குஷ்பு சிறந்த பேச்சாளர் என்றும், திறமைசாலி எனவும் முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.
முதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து பேசிய குஷ்பு, ”ஆயிரம் விளக்கு தொகுதி எங்களது கோட்டை எனக்கூறும் திமுக, இதுவரை தொகுதிக்காக என்ன செய்தீர்கள்? தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நூலகம் கட்ட வக்கில்லாத திமுக தனது குடும்ப வளர்ச்சியை மட்டுமே பார்க்கும். முதலமைச்சரின் தாயார் குறித்து திமுகவினர் மிகவும், இழிவாகவும், கேவலமாகவும் பேசுகின்றனர். அதுமட்டுமின்றி, திமுகவின் பேச்சாளர் ஒருவர் பெண்களின் உடலை கிண்டலடித்து பேசுகிறார். பெண்களை இழிவுப்படுத்துவோர் வீட்டில் பெண்கள் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாளை தாராபுரத்தில் மோடி பரப்புரை!