தமிழ்நாட்டில் சட்டப்படிப்பு முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற, தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத்தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும். அதன் பின்னர் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டு காலம் பயிற்சி பெற வேண்டும். இந்த நடைமுறைகள் முடிந்து அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
இந்த காலக்கட்டத்தில் பல வழக்கறிஞர்கள் வறுமை நிலைக்கு செல்வதோடு, ஒரு சிலர் வேறு மாற்றுத்தொழிலுக்கு சென்று விடுகின்றனர். எனவே, இது போன்ற ஒரு நிலை இளம் வழக்கறிஞர்களுக்கு வராத வகையில், 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.