உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் - முதலமைச்சர் வழங்கினார் - தலா 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
14:07 November 24
சென்னை: மதுரையில் தீபாவளியன்று துணிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த வீரர்கள் இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
மதுரை மாநகர் தல்லாகுளம் நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் கடந்த 14.11.2020 அன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கட்டடம் இடிந்து விழுந்த போது, அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கெடுவாய்ப்பாக உயிரிழந்தனர். இதையடுத்து கடமையாற்றும் போது உயிரிழந்த வீரர்கள் இருவரின் கடமை உணர்வையும், தியாகத்தையும் பாராட்டி, அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், தலா 15 லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வாஜ்பாய் வணங்கிய மதுரை சின்னப் பிள்ளை!