தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணி செய்வோர்’ - முதலமைச்சர் வாழ்த்து! - ஆசிரியர் தினம்

சென்னை: கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை செய்து வரும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

wishes
wishes

By

Published : Sep 4, 2020, 10:57 AM IST

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஆசிரியர் நாள் வாழ்த்துச் செய்தியில், “ கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு, ஆசிரியராய் பணியை தொடங்கி, தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5 அன்று ஆண்டுதோறும் ஆசிரியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கல்விச் செல்வத்தை மாணாக்கருக்கு போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள் ’எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்று தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு, அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றி வரும் நல்லாசிரியர்களுக்கு ’டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’, சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ’கனவு ஆசிரியர் போன்ற சிறப்புமிக்க விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றி வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு இந்நன்னாளில் எனது உளம்கனிந்த ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறப்பு ரயில்கள் பட்டியல் - தென்னக ரயில்வே அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details