இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தேசிய கைத்தறி நாள் வாழ்த்து செய்தியில், “ உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் சுதேசி இயக்கம் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. சுதேசி இயக்கத்தை நினைவுகூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் பொருட்டும், 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் நாள் தேசிய கைத்தறி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
ஜவுளித் தொழிலின் பல்வேறு உட்பிரிவுகளான நூற்புப்பிரிவு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, பதனிடுதல், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஆகிய அனைத்து பிரிவுகளிலும் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 1,133 தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் சுமார் 2.46 இலட்சம் கைத்தறிகளுடன் இயங்கி வருகின்றன. நெசவாளர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றன.
ஊரடங்கால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.