கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 69.09 லட்சம் குடும்பங்களுக்கு, 4.44 கோடி முகக்கவசங்களை நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக 5 பேருக்கு முகக்கவசங்களை அவர் இன்று வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் இத்திட்டத்தின் மூலம் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும்.
30 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முகக்கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள இத்திட்டமானது, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் (சென்னை மாநகராட்சி தவிர) வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த விவகாரம்: ஏபிவிபி தலைவர் மீது கொடுக்கப்பட்ட புகார் வாபஸ்!