சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது பற்றியும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், சென்னையில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் கரோனாவை தடுக்க முடியும். அனைவரும் தகுந்த இடைவெளியை, சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோய் முற்றிய பிறகு சென்றால் மருத்துவம் பலனளிக்காது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னை, கோவையில் கரோனாவை கட்டுப்படுத்த அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தமிழ்நாடு தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.