சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், கடந்த 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஐந்தாண்டு கால ஆட்சி நிறைவடையும் நிலையில் வெறும் 1,000 கடைகளை மட்டுமே அரசு மூடி இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, ”தேர்தல் அறிக்கையில் ஐந்தாண்டு காலத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடிடுவோம் என நாங்கள் குறிப்பிடவில்லை. படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று மட்டுமே தெரிவித்துள்ளோம். அதனடிப்படையிலேயே 1,000 கடைகளை மூடி அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மது விற்பனை செய்யப்படும் நிலையில், இங்கு உடனடியாக மதுவிலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்பதைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது “ என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ” திமுக தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்றீர்கள். எத்தனை விவசாயிகளுக்கு கொடுத்தீர்கள்? எங்கே கொடுத்தீர்கள்? எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளையும் படிப்படியாக மட்டுமே நிறைவேற்ற முடியும் “ என்றார்.