தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவு தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பு' - முதலமைச்சர் இரங்கல்

சென்னை: தனது கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர் நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் என்றும், அவருடைய மறைவு தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பு எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

lakshmanan
lakshmanan

By

Published : Aug 27, 2020, 2:25 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 27) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர். லட்சுமணன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். நீதியரசர் திரு. ஏ.ஆர்.லட்சுமணன் தலைசிறந்த வழக்கறிஞர். இவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், ராஜஸ்தான், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் திறம்பட பணியாற்றியவர். மேலும், பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய பெருமைக்குரியவர். குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை விதித்து தீர்ப்பளித்தவர்.

சென்னை பார் கவுன்சில் செயலாளராகவும், தேசிய சட்ட ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். உச்ச நீதிமன்றத்தால் முல்லைப் பெரியாறு ஆய்வுக்குழுவில் நியமிக்கப்பட்டவர். நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன், தனது கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர். பல நூல்களை எழுதிய பெருமைக்குரியவர்.

அன்னாரின் மறைவு தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பாகும். நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நீதித்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவு

ABOUT THE AUTHOR

...view details