கரோனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட்-19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.
முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மூத்த மருத்துவர்கள் இடம்பெற்று, ஆலோசனை செய்து அரசுக்கு தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினர்.
அதில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள “ஆரோக்கியம்” என்ற சிறப்புத் திட்டம் மூலம் வழிமுறைகளை வெளியிட பரிந்துரைகளை வழங்கினார்கள்.