சென்னை: நம் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் என, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துமடல் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த மடலில் முதலமைச்சர் கூறியதாவது, “ஓய்வறியாச் சூரியனாம் நம் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில் எடுத்துக் கொண்ட சூளுரையின்படி, தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்து, ஒரு மாதகாலம் கடந்திருக்கிறது.
உங்களைப் போன்ற உடன்பிறப்புகளின் கடும் உழைப்பாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும், தோழமைக் கட்சியினரின் ஒத்துழைப்பாலும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் கிடைத்த இந்த வெற்றியை, மே 2-ஆம் நாள் இரவில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவிடத்திலும், நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் ஓய்விடத்திலும் காணிக்கையாக்கி நன்றி செலுத்தினேன்.
அங்கே செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 'எங்களுக்கு வாக்களித்தவர்கள், ‘இவர்களுக்கு நாம் வாக்களித்தது நன்மைதான் - மகிழ்ச்சிதான்’ என்று உணரக்கூடிய வகையிலும், வாக்களிக்காதவர்கள், ‘இவர்களுக்கு நாம் வாக்களிக்காமல் போய்விட்டோமே’ என்று எண்ணக்கூடிய அளவுக்கும் நிச்சயமாக எங்களுடைய பணி அமையும் என்ற உறுதியினை, உத்தரவாதத்தினை வழங்கினேன்'.
பொறுப்பேற்பதற்கு முன்பே கரோனா தொற்று பேரிடர் நிலையை உணர்ந்து, பாரபட்சமற்ற அணுகுமுறையுடன் மக்களின் உயிர் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மே 7ஆம் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நானும், அமைச்சரவையில் உள்ள அனைவரும் அலுவலர்களின் ஒத்துழைப்புடன் 24 மணி நேரமும் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயலாற்றியதன் விளைவாக, நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
பத்தாண்டு கால இருட்டிலிருந்து மீண்டு, உதயசூரியனாம் ஞாயிறு வெளிச்சத்தில் தமிழ்நாடு ஒரு திங்கள் காலத்தைக் கடந்திருக்கும் நிலையில், அனைத்துத் தரப்பிலிருந்தும் திமுக அரசுக்கு வாழ்த்துகள் வந்தவண்ணம் உள்ளன.
ஊடகங்கள் உண்மை நிலையை உரைக்கின்றன. கட்சி எல்லைகளைக் கடந்து திமுக அரசு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பல்வேறு துறையினரும் ஆதரவளிக்கின்றனர். பொதுமக்கள் தங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்ற நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆட்சியின் மீது அங்கொன்றும், இங்கொன்றுமாக வெளிப்படும் சிறுசிறு விமர்சனங்களைக்கூட புறக்கணிக்காமலும், மாற்று ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டும், மக்களின் நலன் காக்கும் அரசாகச் செயல்பட்டு வருகிறோம்.
கரோனா தொற்று அதிகமாக இருந்த கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டேன். பாதிப்புக்குள்ளானோருக்கு உரிய முறையில் விரைவான வகையில் சிகிச்சை கிடைத்திடவும், மற்றவர்கள் பாதிப்படையாத வகையில் தடுப்பூசி முகாம்களைக் கூடுதலாக்கியும், எளியோருக்கான உதவிகள் வழங்கியும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனும் பாதுகாக்கப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் நாள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டமும், இரண்டாவது கட்ட நிவாரணத் தொகையான ரூ.2000 வழங்கும் திட்டமும் மக்கள் நலன் கருதி தொடங்கி வைக்கப்பட்டது.
மருத்துவத் துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கான நிவாரணம், நலிவடைந்த கலைஞர்களுக்கான நிவாரணத் தொகை என, இந்தப் பேரிடர் காலத்தைக் கருதியும், நடைமுறையில் உள்ள ஊரடங்கால் ஏழை - எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப் போக்கும் வகையிலும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் என்ற முறையில், உங்களில் ஒருவனான என் தலைமையிலான மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்குப் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சனை துணைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, அவர்களின் ஆலோசனைகளை முழுமையாகப் பெற்றுச் செயல்படுத்தும் வகையில், அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, அனைத்து மக்களுக்குமான இந்த அரசு தனது பணிகளை ஓய்வின்றி மேற்கொண்டு வருகிறது. காலமறிந்து கூவுகின்ற சேவலாக ஒவ்வொரு செயல்பாடும் தொடர்கிறது.