சேலம்:மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறப்பதால் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
மேட்டூர் அணையில் இன்று (மே 24) காலை நிலவரப்படி, நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்தது. பின்னர், அணைக்கு 10 ஆயிரத்து 508 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக தற்போது வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் கொள்ளளவு 89.94 டிஎம்சி ஆகும். தற்போது, அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை மேட்டூர் அணை பகுதிக்கு வந்து, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து, அணையின் மேல் பகுதியிலிருந்து மலர்தூவினார். பின்னர் முதலமைச்சர் அணைப்பகுதியில் இருந்த விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தற்போது முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து வலது கரையில் உள்ள எட்டு கண் மதகு மூலம் வெளியேற்றப்படுகிறது. அதன்பிறகு, சுரங்க மின்நிலையம் வழியே வெளியேற்றப்படும்.