சென்னை:இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நல்லாட்சி வழங்கிவரும் திமுக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், அங்கே வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திலும், அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பயன்பெற்று மகிழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கமே, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான இலக்காகும்.
கழக வேட்பாளர்களும், தோழமைக் கட்சி வேட்பாளர்களும், ஒவ்வொரு வாக்காளனையும் தவறாமல் நேரில் சந்தித்து, வேண்டுகோள்விடுத்து, தங்கள் வெற்றியை உறுதிசெய்யும் விளக்கப் பரப்புரையை மேற்கொள்கின்ற நேரம் இது.
வேட்பாளர்களையும், அவர்களுக்காக அரும்பாடுபடுகிற உடன்பிறப்புகளையும், வெற்றியை மனமுவந்து வாரி வழங்கவிருக்கிற வாக்காளர்களையும், உங்களுடன் இணைந்து நானும் நேரில் சந்திக்கவே பெரிதும் விரும்புகிறேன். முதலமைச்சர் என்ற பொறுப்பை இதே வாக்காளர்கள்தாம் கடந்த ஆண்டு மே மாதம் என்னை நம்பி, உளப்பூர்வமாக ஒப்படைத்தார்கள். அவர்கள் வைத்த நம்பிக்கை, ஒரு நாளும் ஒரு சிறிதும் வீணாகாதபடி, ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
மக்களைக் கண்ணை இமைபோல் காத்த அரசு
கரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் கண்ணை இமை காப்பதுபோல் காத்த நமது அரசு, மூன்றாவது அலையையும் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. அது மேலும் பரவாமல் இருப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைக் காக்க வேண்டிய கடமை முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள எனக்குக் கூடுதலாகவே இருக்கிறது.
விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. உங்களில் ஒருவனான என் மீது, சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும், அதற்கு முன்பும், என்னென்ன விமர்சனங்களை வைத்தார்கள் என்பதை உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
எந்தவொரு ஆக்கப்பூர்வமான - பொறுப்பான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சியினர், ஈரைப் பேனாக்கி இட்டுக் கட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். வெறும் வாயையே மென்று சுகம் காணும் அவர்களுக்கு, வெல்லமும் அவலும் கலந்து வாயில்போட்டது போலாகிவிடும் என்பதே என் எண்ணம்.
அவர்களின் விமர்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால், நேரடிப் பரப்புரை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, காணொலிப் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக, உடன்பிறப்புகள், வாக்காளர்களின் ஒளிமுகம் கண்டு, அகம் மிக மகிழ்கிறேன்.
பெண்களை ஆபாசமாகப் பேசுவார்கள்
“மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். காற்றேற்றப்பட்ட பலூன், கண்ணுக்குத் தெரியாத குண்டூசி குத்தினாலே, உருத் தெரியாமல் சிதறிவிடும் அல்லவா! நீங்கள் உண்மைகளை மக்களிடம், உரிய வகையில் எடுத்துச் சொன்னாலே போதும்.
எதிரணியினர் நம்மை கோபப்படுத்துவார்கள், ஆத்திரப்படுத்துவார்கள். அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது! அவர்கள்போல நாம், தரம்தாழ்ந்து, நிலை தடுமாறி, நடந்துகொள்ளவும் முடியாது.
வெறும் கரண்டி பிடித்துள்ளவன், கையை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம். ஆனால், எண்ணெய் கரண்டியை கையில் வைத்துள்ள நாம் அந்த மாதிரி சுழற்ற முடியாது, மீறிச் சுழற்றினால், எண்ணெய் கீழே கொட்டிவிடும். ஆட்சியில், வெகுமக்கள் வழங்கிய அதிகாரத்தில் நாம் இருப்பதால், அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, கீழே இறங்கி தெருச்சண்டை போடவும் முடியாது; லாவணி பாடவும் முடியாது. இதை நீங்கள் எப்போதும் மனத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
பதில் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, புதுப் பிரச்சினையை உருவாக்கிவிடக் கூடாது. எடுத்துரைப்பதற்கு நம்மிடம் ஏராளமான சாதனைகள் இருக்கின்றன. பெருமையோடுப் பேசுவதற்கு நம்மிடம் பீடுடைய வரலாறு இருக்கிறது.
நாடும், ஏடும் போற்றும் நமது முன்னோடியான தலைவர்கள், அரிய ஆளுமைகள் - லட்சிய வேட்கை மிக்கவர்கள் - அதற்காகப் பல வகையிலும் தியாகங்களைச் செய்தவர்கள். இதைத் தக்கபடி எடுத்துச் சொன்னாலே போதும். எக்காரணம் கொண்டும் தேவையில்லாததைச் சொல்ல வேண்டாம்.
பொய் சொல்வதற்கு சிலர் கொஞ்சமும் கூச்சப்படவில்லை
தொலைக்காட்சி ஊடகங்கள், இணையதளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வரிசையில் அதிகப்படியான மக்களால் பார்க்கப்படுவதும், படிக்கப்படுவதும், பகிரப்படுவதும் வாட்ஸ்அப் செய்திகள்தாம். புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். சாதாரண மக்கள் பார்வையிடும் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நமது செய்திகளைக் கச்சிதமாகப் பகிருங்கள்.
பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? அந்தத் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து, உண்மையான செய்திகளை உரக்கச் சொல்லி எல்லாருக்கும் கொண்டுசேர்ப்போம் என்பதை தகவல் தொழில்நுட்ப அணி சார்பிலான காணொலிக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோரின் வாய்ஜாலச்சதியினை முறியடித்து, நம் சாதனையைப் பரப்புவோம். சாதனைகளால் நிரம்பிய வாட்ஸ்அப் செய்திகள் நூறாக, ஆயிரமாக, லட்சங்களாகப் பகிரப்படும்போது அது வெறும் வாட்ஸ்அப் செய்தியன்று.