உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கும் வகையிலும், இங்கு முதலீடு செய்வதில் உள்ள சாதக பாதகங்களை விவாதிக்கும் வகையிலும், 'யாதும் ஊரே' இணையவழி மாநாடு நடத்தப்படுகிறது.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இணைய வழியில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, மொரிஷியஸ் உள்ளிட்ட 38 நாடுகளைச் சேர்ந்த தொழில்துறையினர், முதலீட்டாளர்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இதில், பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழர்கள் கலந்துரையாடுகின்றனர். சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டை, தென்னிந்திய வர்த்தக சபையுடன் இணைந்து தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனம் நடத்துகிறது.