’ஈழுவா’ மற்றும் ’தீயா’ வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்ப்பதற்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதனை ஆய்வு செய்ததில், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டை வட்டமும், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன. அந்த சமஸ்தானத்தில் சலுகைகள் பெற்று வந்த சாதிகளுக்கு தமிழ்நாட்டிலும் அச்சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஈழுவா வகுப்பு கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் இதர பகுதிகளில் வாழும் ஈழுவா வகுப்பினரையும், தீயா வகுப்பினரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்தான கோரிக்கையின் மீதும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது. அதனடிப்படையில், அனைத்து மாவட்டங்களில் வாழும் ஈழுவா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையினையும், தீயா வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையினையும் தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.