சென்னை: இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று(ஜூன்.29) வெளியிட்டுள்ள அறிவிப்பில்," கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில், நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று இன்று(ஜூன்.29) வரை ரூ.353 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலம் கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும் பயண்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.50 கோடி வழங்கிடவும், இரண்டாவது கட்டமாக கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, ஆர்டிபிசிஆர் கிட்-களை வாங்குவதற்கு ரூ.50 கோடி வழங்கிடவும் முதலமைச்சர் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.