தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

"மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை"- தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

chief-minister-edappadi-palanisamy
chief-minister-edappadi-palanisamy

By

Published : Aug 3, 2020, 11:33 AM IST

Updated : Aug 3, 2020, 1:01 PM IST

இது குறித்து அவர் அறிக்கையில், "தமிழ்நாடு மக்கள் 80 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக தங்களது உணர்வை, பல காலகட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

1963ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டம் 3ஆவது பிரிவில் இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களில் மத்திய அரசானது ஆங்கில மொழியில்தான் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தும் 1965ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு இந்தியை அலுவல் மொழியாக மாற்ற நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து மாணவர்களும், மக்களும் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர்.

மக்களிடைய மும்மொழிக் கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காததால் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1968 ஜனவரி 23ஆம் தேதி "தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு மட்டும் இடமளித்து தீர்மானம் எடுத்து நிறைவேற்றினார்.

அதன்படி தமிழ்நாட்டில் இந்தி மொழிப் பாட திட்டத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டது. அப்படி அண்ணா தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் உறுதியான கொள்கையாக இருந்தது.

அதன்படியே, அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது 1986ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா "இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அதற்கான முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம்" என சூளுரைத்தார்.

மேலும் இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.

அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழி வந்த தமிழ்நாடு அரசும், மத்திய அரசு வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி அதனை தீவிரமாக எதிர்த்தது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட வலியுறுத்தி 2019ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினேன்.

அதேபோல இரு மொழிக் கொள்கையையே தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்தாண்டு சுதந்திர தின உரையிலும், சட்டப்பேரவையில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.

எனவே மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும் அம்மாவின் (அதிமுக) அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது.

இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் ஏற்று மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

எனவே அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப மும்மொழிக்கொள்கையை செயல்படுத்திக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடியைக் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசுதான் தமிழ்நாடு அரசு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தனியார் பள்ளிகள் கட்டணம் கேட்டு பெற்றோருக்கு தொந்தரவு கொடுத்தால் நடவடிக்கை பாயும்...!

Last Updated : Aug 3, 2020, 1:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details