இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்தப் பொன்னான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாத்மா காந்தியடிகள் காட்டிய அகிம்சை வழியில், ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுத் தந்திட தங்கள் இன்னுயிரை நீத்த பல்லாயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகத்தைப் போற்றும் நன்னாளாக இச்சுதந்திரத் தினம் விளங்குகிறது.
தமிழ்நாடு அரசு, சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை பெருமைப்படுத்தும் வகையில், விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 15,000 ரூபாயிலிருந்து 16,000 ரூபாயாகவும், அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு விலையில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவை போற்றும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையிலும் நினைவு மண்டபங்கள், திருவுருவச் சிலைகள், நினைவுத் தூண்கள் நிறுவி விழாக்கள் நடத்தி பெருமை சேர்த்து வருகிறது.
இந்த இனிய நாளில், நமது தாய் திருநாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி வல்லரசு நாடாக உயர்த்திடவும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் எனது உளமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எழும்பூர் ரயில் நிலையத்தில் சுதந்திர தின பாதுகாப்பு சோதனை!