இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வருகிற 10, 11ஆம் தேதிகளில் சென்னை வர இருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசியல் கட்சியினருடன், காவல் துறை மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், காவல் துறை இயக்குநர், அமலாக்கத் துறை அலுவலர்கள், அரசின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் சென்னை வந்து இரண்டு நாள்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தலை நடத்துவது குறித்தும், தற்போது அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வரவுள்ளதால் அந்தந்த மாவட்டப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுவது குறித்தும் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஏற்கனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இரண்டு நாள் சுற்றுப்பயணமாகத் தமிழ்நாடு வரவுள்ளார்.