தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் - கே. பாலகிருஷ்ணன் - கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

சென்னை : சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைத்து கல்லூரி கட்டணத்தை தீர்மானித்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும்!
ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும்!

By

Published : Nov 30, 2020, 6:28 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “தமிழ்நாடு அரசு சிதம்பரம்அண்ணாமலைப் பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி பல்கலைக்கழகத்தின் முழு நிர்வாகத்தையும் 2013ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அண்ணாமலைப் பல்கலைகழகத்தோடு இணைந்த ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியும் இணைந்தே கையகப்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத சூழ்நிலையில், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக அறிவிக்க வேண்டுமெனவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சிகிச்சையளித்திட இதனை உயர் பல்நோக்கு மருத்துவமனையாக (சூப்பர் ஸ்பொசலிட்டி) மாற்றிட வேண்டுமெனவும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளோம்.

இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இம்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என அறிவித்ததுடன் இதற்கான தொடக்க விழாவினை கடந்த 7.4.2020 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி மூலம் நடத்துவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத வண்ணம் கரோனா நோய்த் தொற்று காரணமாக இவ்விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால், அரசு ஆவணங்களில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்றே பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என அறிவிக்கப்பட்ட பின்னரும் அங்கு பயிலும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் தீர்மானிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணங்களே இந்தாண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் தீர்மானிக்கப்படும் ரூ. 5.40 லட்சம் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர். இம்மாணவர்களின் பெற்றோர்களும் பெரும் வேதனையிலும் மூழ்கியுள்ளனர்.

ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும்!

உயர்கல்வித்துறையின் கீழ் இம்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நீடிப்பதன் விளைவாகவே இவ்வாறு கட்டணம் தீர்மானிப்பதாக விளக்கமளிக்கப்படுகிறது. மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி என அறிவிக்கப்பட்ட பின் இவைகளை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பதே பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு செய்வதின் மூலமே இம்மருத்துவமனை சிறந்த மருத்துவ சேவையை இப்பகுதி மக்களுக்கு வழங்கவும், கடலூர் மாவட்ட மருத்துவமனையாக அரசு அறிவித்த நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும். மேலும் பயிலும் ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கவும் முடியும். உயர்கல்வித்துறையிலிருந்து மருத்துவ துறைக்கு இக்கல்லூரியை மாற்றுவது அரசின் முடிவின் அடிப்படையில் எளிதானதாகும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

எனவே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை (கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை) எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, இங்கு பயிலும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை தீர்மானித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க :ஜனவரியில் கட்சி தொடங்குகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?

ABOUT THE AUTHOR

...view details