செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மகாபலிப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் தங்குவதற்காக சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 37 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் போட்டியில் கலந்துகொள்ள ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளை பயன்படுத்தி மாமல்லபுரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த சாலைகளில் முழுமையான பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரம் காவல்துறையினர் 17 நாட்கள் சென்னையில் பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.