சென்னை:சென்னை மாமல்லபுரத்தில் நாளை 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை காண எராளமான சுற்றுலாப் பயணிகள் வரவிருப்பதால், அவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக செஸ் வீரர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களை எளிதில் சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நட்பு வாகனங்களை சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். குறிப்பாக 25 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, சுற்றுலா நட்பு வாகன சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்கள் மூலம் மலிவான விலையில் மாமல்லபுரத்தில் சவாரி மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் சோழமண்டல ஆர்டிஸ்ட் வில்லேஜ் - மாமல்லபுரம் இடையேயான 5 இலவச பேருந்து சேவையை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.