தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Victory War Memorial: இது ஓர் ஒற்றுமைக்கான சின்னம்; வீரர்களின் நினைவைப் போற்றும் சின்னம் - டிசம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணி வரை சென்னை வெற்றிப் போர் நினைவுச்சின்னம் செல்ல அனுமதி

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், சென்னை போர் நினைவுச்சின்னம் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர். இதுகுறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

Chennai Victory War Memorial, Chennai Victory War Memorial ETV Bharat special Story, History of Chennai Victory War Memorial, Special Feautres of Chennai Victory War Memorial, Chennai Victory War Memorial location, Chennai Victory War Memorial opens till December 19 5pm, Public allowed for 4 days in Chennai Victory War Memorial, சென்னை வெற்றிப் போர் நினைவுச்சின்னம், சென்னை வெற்றிப் போர் நினைவுச்சின்னம் ஈடிவி பாரத் சிறப்பு தொகுப்புகள், சென்னை வெற்றிப் போர் நினைவுச்சின்னத்தின் வரலாறு, வெற்றிப் போர் நினைவுச்சின்னத்தின் சிறப்பு, டிசம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணி வரை, சென்னை வெற்றிப் போர் நினைவுச்சின்னம் செல்ல அனுமதி, வெற்றிப் போர் சின்னம் உள்ள இடம்
போர் வெற்றிகளை விளக்கும் ஓவியங்கள்

By

Published : Dec 18, 2021, 7:00 PM IST

Updated : Dec 18, 2021, 9:17 PM IST

சென்னை: வெற்றி போர் நினைவுச்சின்னம் என்னும் விக்டரி வார் மெமோரியல் (Victory War Memorial) சென்னையில் உள்ள ஒரு போர் நினைவுச் சின்னமாகும். இது முதலாம் உலகப் போரின் போது (1914-1918) நேச நாட்டுப் படைகளின் வெற்றியின் நினைவாக முதலில் கட்டப்பட்டது. பின்னர், இரண்டாம் உலகப் போருக்கான வெற்றிப் போர் நினைவுச்சின்னமாக மாறியது (1939 –1945).

மெட்ராஸ் மாகாணமாக இருந்து போர்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டது.
பின்னர், கூடுதலாக 1948இல் காஷ்மீர் ஆக்கிரமிப்பு, 1962இல் சீனாவுடனான போர், இந்திய-பாகிஸ்தான் போர் ஆகியவற்றின் கல்வெட்டுகள் இதில் இடம் பெற்றுள்ளன.

நினைவுச்சின்னம்

விக்டரி வார் மெமோரியல், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் அருகே அமைந்துள்ளது. இது ஒரு வட்டமான பாறை மற்றும் பளிங்கு அமைப்பாகும். இங்கு முன்பு கடலோர மணிக்கூண்டு அமைந்திருந்தது. ஒரு காலத்தில் மன்மதன் வில் என்று அழைக்கப்பட்ட மூவர்ண கொடியுடன் ஒரு கொடி கம்பமும், வானத்தை நோக்கிச் செல்லும் குந்து கோபுரமும் உள்ளது.

வீரர்களின் நினைவைப் போற்றும் சின்னம்

பாதையில் வரிசையாக இருக்கும் சிவப்பு மற்றும் தங்க நிற பென்னண்டுகளுக்கு அப்பால், மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து இரண்டு உலகப் போர்களில் வீழ்ந்தவர்கள் மற்றும் சுதந்திரத்திற்குப் பின் வந்தவர்களின் பெயர்கள் காணப்படும்.

ஒற்றுமை உணர்வுக்கான சின்னம்

உயர்ந்து நிற்கும் தேசியக் கொடி நீண்ட தூரத்திற்குத் தெரியும். ஆண்டு முழுவதும் இருக்கும். இந்த கொடி அனைத்து குடிமக்களிடையேயும் ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் உணர்வை ஊட்டுவதாகவும், சேவைகளின் உயர்ந்த பாரம்பரியத்தில் நமது வீரர்கள் செய்த உயர்ந்த தியாகங்களை அவர்களுக்கு நினைவூட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது.

வெற்றிப் போர் நினைவுச்சின்னம்

30.5 மீ., உயரம் கொண்ட கொடிக் கம்பம், 20 அடிக்கு 30 அடி உயரமுள்ள மூவர்ண கொடியை பெருமையுடன் தாங்கி நிற்கிறது. இது வெற்றி போர் நினைவுச் சின்னத்தின் பெருமையைக் கூட்டுகிறது. இங்கு தேசியக் கொடியுடன் முப்படைகளின் கொடிகளும் காணப்படுகிறது.

தமிழில் கல்வெட்டு

பெரும் போர்களில் அரசுக்காக நாட்டுத் தொண்டாற்றி உயிரிழந்த சகல சென்னை மாநில மக்களின் நினைவுச் சின்னம் என கல்வெட்டு தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு உருது மொழியிலும் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

வெற்றிப் போர் நினைவுச்சின்னம்

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுத்தது. டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர், டிசம்பர்16ஆம் தேதி முடிவில் இந்தியா வெற்றிவாகை சூடியது. அன்று நிபந்தனையற்ற போர்நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

வெற்றிப் போர் நினைவுச்சின்னம்

மேலும், அதே தினத்தில் போரில் பங்கேற்ற பாகிஸ்தான் வீரர்கள் 93 ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், டிச.16ஆம் தேதியை ‘விஜய் திவாஸ்’ என்று இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு டிச.16-ம் தேதி (நேற்று முன்தினம்) போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழாவாகக் கொண்டாடப்பட்டது.

வெற்றிப் போர் நினைவுச்சின்னம்

இதை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் போர் நினைவுச் சின்னத்தில், மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதேபோல், சென்னையில் உள்ள முப்படைகளின் தலைமை அலுவலர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும், இப்போரில் பங்கேற்றவர்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் சிறப்பிக்கப்பட்டனர்.

4 நாள்கள் அனுமதி

போர் நினைவு சின்னம், நேற்று முன்தினம் (டிசம்பர் 16) காலை 10 மணி முதல் நாளை (டிசம்பர் 19) மாலை 5 மணிவரை நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், என்சிசி கல்லூரி மாணவர்கள், முன்னாள் ராணுவ அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த போர் நினைவுச் சின்னத்திற்கு வருகை தந்து மரியாதை செலுத்தினர். இங்கு இதற்காக பூக்கள், மெழுகுவர்த்திகள் தனியாக விற்கப்பட்டு வருகிறது.

போர் வெற்றிகளை விளக்கும் ஓவியங்கள்

சென்னையில் உள்ள ராணுவ வீரர்கள் சார்பாக மெரினா கடற்கரையின் மணல்களை எடுத்து இந்தியா பாகிஸ்தானை எவ்வாறு வெற்றி கொண்டது குறித்து, முப்படைகளின் திட்டத்தினை விளக்கும் வகையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா போரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பாகிஸ்தான், இந்திய நாட்டுக்கு ஒப்பந்தத்தை எழுதும் வகையில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனை மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். மேலும், இந்த ஓவியங்கள் ஒரே இரவில் வரையப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

ராணுவ வீரர்களை கௌரவிக்க வேண்டும்

பார்வையாளர் செல்வக்குமார், "இந்த போர் நினைவுச் சின்னத்தை பார்க்க வேண்டும் என்று எனது மகன், மனைவி தெரிவித்ததால் இந்த இடத்திற்கு வந்தோம். குழந்தைகளை சினிமா தியேட்டர், ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வதைக் காட்டிலும் இந்த மாதிரி போர் நினைவுச் சின்னத்திற்கு அழைத்து வந்தால் அவர்களுக்கு தாய்மண்ணின் சிறப்பு, தாய் நாட்டுப் பற்றும் ராணுவ வீரர்களின் வீரமும் தியாகமும் புரிந்து கொள்ள முடியும்" என்று கூறினார்.

32 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கேப்டன் செல்வராஜ் நம்மிடம் பேசும்போது, "மக்களுக்கு பாதுகாப்பு தேவை. ராணுவத்தின் மூலம் நமக்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. இந்த பாதுகாப்பை புரிந்து கொண்டு மக்கள் அனைவரும் ராணுவ வீரரை கௌரவப்படுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

குடும்பத்தில் ஒருவர்

பார்வையாளர் ஹேமாவதி கூறியதாவது, "1921ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் நாட்டிற்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதையை குடும்பத்தோடு செலுத்தினோம். ராணுவ வீரர்கள் நாட்டிற்காக எவ்வளவோ துன்பங்களை கடந்து வருகின்றனர். அவர்களை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். மரியாதை செலுத்த வேண்டும், குடும்பத்தில் ஒருவராக நினைத்து மரியாதை செலுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?

Last Updated : Dec 18, 2021, 9:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details