சென்னை:சென்னையில் நேற்று (ஆக. 21) காலையில் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல், அண்ணா மேம்பாலம் அருகே மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்களான மோகன் ராஜ், வின்சன்ட் ஆகியோர் தாங்களாவே முன்வந்து கால்வாய் அடைப்பை குச்சியால் சரி செய்தனர்.
இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து காவலர்களை வெகுவாக பாராட்டினர். இந்த காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் பொதுமக்கள் பலரும் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அண்ணா மேம்பாலம் பகுதியில் அடைப்பை சீர்செய்த இரண்டு காவலர்கள் தத்தளிக்கும் முக்கியச் சாலைகள்
சென்னையில் நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், தேனாம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் நேற்று பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், நகரின் முக்கியச் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வானிலை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை, மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று (ஆக. 22) முதல் நான்கு நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: சென்னையில் வெளுத்து வாங்கிய மழை: மழைநீரால் சூழப்பட்ட ரிப்பன் மாளிகை