தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓடுபாதையில் சென்ற விமானத்தில் கோளாறு! பெரும் விபத்து தவிர்ப்பு!

சென்னையிலிருந்து அபுதாபிக்கு 46 பேருடன் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் ஓடுபாதையில் இருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.

abu dhabi etihad flight takeoff problem
abu dhabi etihad flight takeoff problem

By

Published : Jan 3, 2021, 9:48 AM IST

சென்னை: பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செல்லவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், அதன் சேவை ஒரு நாளைக்கு நிறுத்தப்பட்டது.

சென்னையிலிருந்து அபுதாபிக்கு செல்லும் எத்திஹடு ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று (ஜனவரி 3) அதிகாலை 3.50 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 38 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட 46 போ் இருந்தனர். விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது.

அப்போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுப்பிடித்தார். இனியும் விமானத்தை வானில் பறக்க வைப்பது ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தினார். அதோடு விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.

உடனடியாக விமானம் இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட இடத்திற்கே இழுத்து கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. விமானப் பொறியாளர்கள் விமானத்திற்குள் ஏறி, இயந்திரக் கோளாறை சரிசெய்ய முயன்றனர். ஆனால் உடனடியாக முடியவில்லை.

இதையடுத்து இன்று காலை 6 மணிக்கு விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். விமானம் பழுது பாா்க்கப்பட்டு இன்று இரவு புறப்பட்டுச் செல்லும் என்று விமான நிறுவன தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details