சென்னை:திருவொற்றியூர் கிராமத் தெருவில் நான்கு மாடிகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 336 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் 1992ஆம் ஆண்டு கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டு, 1998இல் கட்டி முடிக்கப்பட்டது.
தேனாம்பேட்டை, திருவொற்றியூர், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டன. இந்த வீடுகளுக்கு வாடகையாக ரூ.250 வசூலிக்கப்பட்டுவந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்தக் குடியிருப்பில் இருந்த வீடுகளின் பல கட்டடங்களில் கடுமையான விரிசலும், கசிவும் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்பு இடிந்து விழுந்தது டி பிளாக் முழுவதும் இடிந்தது
இது குறித்து குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் அலுவலர்களிடம் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து, குடிசை மாற்று வாரிய அலுவலர்கள்கள் சிறு, சிறு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
நேற்றிரவு (டிசம்பர் 26) குடியிருப்பின் 24 வீடுகள் கொண்ட 'டி' பிளாக் அடுக்குமாடி குடியிருப்பில் லேசாக விரிசல் ஏற்பட்டது. மேலும், கட்டடத்தின் நிலை மோசமாக இருந்ததால் இன்று (டிசம்பர் 27) காலை அந்தக் கட்டடத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இடிபாடுகளில் அலுவலர்கள் ஆய்வு தொடரும் மீட்புப் பணி
இந்நிலையில், இன்று காலை திடீரென பெரிய சத்தத்துடன் வீடுகள் இடிந்து கீழே விழத் தொடங்கின. வீடுகளுக்குள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக இதுவரை எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை.
தகவலறிந்து, தீயணைப்பு மீட்புப் படையினரும், காவல் துறையினரும் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அவசரநிலையைக் கருத்தில்கொண்டு இரண்டு தீயணைப்பு வாகனங்கள், மருத்துவர்கள் குழு அடங்கிய ஆம்புலன்ஸ்கள் போன்றவை சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து மேலும், சம்பவ இடத்திற்கு குடிசை மாற்று வாரிய அலுவலர்களும் விரைந்துவந்து, இடிபாடுகளில் ஆய்வுமேற்கொண்டனர். மேலும், அதற்கு அருகில் உள்ள கட்டடமும் இடியும் நிலையில் இருப்பதால், அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத அளவிற்குப் பாதுகாப்புப் பணிகளைக் காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: குடியிருப்பு விபத்து: ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்