ஐபிஎல் 2021இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியை வென்று கோப்பையை நான்காவது முறையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகக் குழு சார்பில் ஐபிஎல் கோப்பையை தி. நகரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் வைத்து பூஜை செய்தனர்.
ஐசிசி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு நிர்வாகக் குழுத் தலைவர் சேகர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். ஐபிஎல் கோப்பையை ஏழுமலை வெங்கடாசலபதி முன்வைத்து பூஜை செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த ஸ்ரீனிவாசன், “திருப்பதி வெங்கடாசலபதி முன் ஐபிஎல் கோப்பையை வைத்து வழிபடுவதில் பெருமை அடைகிறேன். எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு 75ஆவது ஆண்டில் கோப்பையை தோனி பெற்றுக்கொடுத்துள்ளார். இதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தகுதிச்சுற்றைத் தாண்டவில்லை. இந்தாண்டு எப்படியோ என்று நினைத்தோம்! ஆனால், எம்.எஸ். தோனி கண்டிப்பாக சென்னை அணி வெற்றிபெறும் என நம்பிக்கைத் தெரிவித்தார். சொன்னபடியே கோப்பையைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
சென்னை அணியின் வெற்றியைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பதிவிட்டிருந்தார். தற்போது நடைபெறும் உலகக்கோப்பை போட்டி முடிந்ததும் தோனி சென்னை வருவார். தோனியின் கையால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோப்பை வழங்கப்படும். முதலமைச்சர் தலைமையில் சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
தோனி இல்லாமல் சிஎஸ்கே கிடையாது
இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சிறப்பான அணி, தோனி மெண்டராக உள்ளதால் நிச்சயம் இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லும்” எனத் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஐபிஎல் ஏலத்தில் தோனி இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு, “சிஎஸ்கே இல்லாமல் எம்.எஸ். தோனி கிடையாது; எம்.எஸ். தோனி இல்லாமல் சிஎஸ்கே கிடையாது. எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்பது குறித்து இதுவரை பிசிசிஐ விதிமுறையை வெளியிடவில்லை.
விதிமுறைகள் அடிப்படையில் முடிவுசெய்வோம். திறமையான தமிழ்நாடு வீரர்களுக்கு நிச்சயம் அணியில் இடம் உண்டு. டிஎன்பிஎல் மூலமாகத் திறமையான தமிழ்நாடு வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க:கேரள பெருவெள்ளம் - திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்